அமெரிக்க பகிரங்க டென்னிஸ் : ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் வெற்றி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், 7-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார். 4 மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில், முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடிய டொமினிக் திம் வெற்றி பெற்று சம்பியனானார்.
கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் இன்றி அரங்கேறிய இந்த போட்டியில் இருவரும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக மல்லுக்கட்டினார்கள். துடிப்பான ஆட்டத்தினால் முதல் 2 செட்களையும் ஸ்வெரேவ் தனதாக்கினார். அதேநேரத்தில் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்த டொமினிக் திம் அடுத்த 2 செட்களை சொந்தமாக்கினார். இதனால் இந்த ஆட்டம் பரபரப்பான 5-வது செட்டுக்கு நகர்ந்தது.
கடைசி செட்டில் ஸ்வெரேவ் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் அவருக்கு தான் மகுடம் கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவரது ‘செர்வ்’ சொதப்பியதுடன், சில தவறுகளையும் இழைத்தார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட டொமினிக் திம் முன்னேற்ற பாதையில் வீறு நடைபோட்டதுடன் ‘டைபிரேக்கர்’ வரை சென்ற அந்த செட்டை கைப்பற்றி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
4 மணி 1 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் டொமினிக் திம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 27 வயதான திம் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 2018, 2019-ம் ஆண்டு பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸிலும், இந்த ஆண்டு நடந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸிலும் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்து இருந்தார்.
1949-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் 2 செட்களையும் இழந்து பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை டொமினிக் திம் படைத்தார். மேலும் 2014-ம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் (குரோஷிய வீரர் மரின் சிலிச் சாம்பியன்) போட்டிக்கு பிறகு புதிய வீரர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இருவரும் நேருக்கு நேர் 10- முறை மோதி உள்ளனர். இதுவரை நடந்த சந்திப்புகளில் டொமினிக் திம் 8 முறையும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 தடவையும் வென்றுள்ளனர்