20ஆல் அரசுக்குள் முரண்பாடு தாமதப்படுத்தவே விசேட குழு – ரஞ்சித் மத்தும பண்டார
“20ஆவது திருத்தம் குறித்து அரசுக்குள் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதன் காரணமாகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ச 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சிறப்புக் குழுவை நியமித்துள்ளார்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு முழுமையாக ஆராயமால் 20ஆவது திருத்தம் குறித்த நகல் வடிவை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
நகல் வடிவில் என்ன விடயங்கள் காணப்படுகின்றன என்பது நீதி அமைச்சருக்கு மாத்திரம் தெரிந்திருந்தது. ஏனைய அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது.
அதனாலேயே அரசின் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் 20ஆவது திருத்தத்துக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளியிட்டு வருகின்றார்கள்.
20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் தற்போதைய நிலைமையில் அரசுக்கு இல்லை.
இந்தநிலையில், 20ஆவது திருத்த நடைமுறைகளைத் தாமதிப்பதற்காகவே ’20’ தொடர்பில் ஆராய சிறப்புக் குழுவை பிரதமர் நியமித்துள்ளார்” – என்றார்.