தமிழ் அரசுக் கட்சியின் புதிய செயலாளரை பொதுக்குழுவே தீர்மானிக்கும் – சம்பந்தன்

“இலங்கைத் தமிழ் அரசுக்க் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பதைக் கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடித் தீர்மானிக்கும். அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஜனநாயகக் கட்சி. அக்கட்சிக்குரிய பதவி நிலைகள் ஜனநாயக முறைப்படியே தெரிவுசெய்யப்படும்.

கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து கடந்த 9ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவித்திருந்தார். அவரது கடிதம் நேற்று (12) எனது கைக்குக் கிடைத்தது.

அந்தக் கடிதத்தில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த விருப்பின் அடிப்படையிலும் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவரின் பதவி விலகலைக் கேள்விக்குட்படுத்த முடியாது. தமிழ் அரசுக்க் கட்சியின் புதிய பொதுச்செயலாளரை கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடித் தீர்மானிக்கும். அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருக்க வேண்டும். கட்சியின் ஒற்றுமை கருதி அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!