கொரோனா தடுப்பூசி சவாலை ஏற்றார் இவாங்கா ட்ரம்ப்

“அமெரிக்கா கண்டுபிடிக்கும் புதிய கொரோனா தடுப்பூசி மருந்தை என் உடலில் செலுத்திக் கொள்ள தயாராக உள்ளேன்” என அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்பின் மகளும் அவரது ஆலோசகருமான இவாங்கா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனைக்கு வந்து விடும் என ட்ரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ‘இந்தாண்டு இறுதியில் அல்ல அதற்கு முன்பாகவே முக்கிய நிகழ்ச்சி நடப்பதற்கு முன் மக்களுக்கு தடுப்பூசி கிடைத்து விடும்’ என ஒரு போடு போட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவ.3ல் நடப்பதால் அதை மனதில் வைத்து ட்ரம்ப் அவ்வாறு கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது குறித்து ‘ தி வியூ’ என்ற ‘டிவி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜாய் பெஹர் காட்டமாக கூறியதாவது:

“பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்தான் போலியோ, தட்டம்மை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆனால் ட்ரம்ப் தேர்தல் ஆதாயத்திற்காக அவசரமாக தடுப்பூசியை சந்தைக்கு கொண்டு வர துடிக்கிறார். அந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசி மருந்தை ட்ரம்பின் மகள் இவாங்கா செலுத்திக் கொள்வாரா… அவ்வாறு செய்தால் நானும் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன்” –  இவ்வாறு அவர் சவால் விட்டார்.

 இந்த சவாலை உடனே ஏற்ற இவாங்கா,

”அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசியைத் தான் மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் வழங்கும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்களுடன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொள்ளத் தயார்’ – ‘ என ‘டுவிட்டரில்’ ஜாய் பெஹருக்கு பதிலடி தந்துள்ளார். இது அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் மேலும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!