நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு நீட் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
கொரனோ வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில், கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான எந்தவிதமான நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது என்று அகில இந்திய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ளது.
ஆனால், மாணவர்களின் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரிலேயே இந்த தேர்தல் நடத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு எழுதவுள்ளனர்.