மோடியின் 114 உருவ படங்களை வரைந்த மாணவர்
இந்தியப்பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் தினத்தன்று பிளஸ்-1 மாணவர் தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளார்.
பாளை பெருமாள்புரம் என்.எச்.காலனியை சேர்ந்த கணேசன் ஒரு ஓவிய ஆசிரியர். இவரது மகன் மகாராஜன் (வயது 16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கணேசன் வரையும் ஓவியங்களின் மீது ஈர்ப்பு கொண்ட மகாராஜன் தந்தையைபோல ஓவியம் வரைய முடிவு எடுத்தார். இதற்காக பாளையில் உள்ள தனது வீட்டிலும், மகாராஜநகரில் உள்ள சிவராம் கலை கூடத்திலும் பிரதமர் மோடியின் உருவ படங்களை வரைந்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களாக மோடியின் விதவிதமான படங்களை மகாராஜன் வரைந்து வருகிறார். மோடியின் 70-வது பிறந்தநாள் தினத்தன்று தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளார்.
இது குறித்து மாணவர் மகாராஜன் கூறுகையில்,
‘எனது தந்தை ஓவிய ஆசிரியர் என்பதால் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால் பிரதமர் மோடியின் உருவப் படங்களை வரைவதற்கு முடிவு செய்து இணையதளங்களில் மோடியின் வெவ்வேறு உருவ படங்களை எடுத்து வரைந்து வருகிறேன்.
பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் பாரம்பரிய முறைப்படியான உடைகளை அணிவார். அதன்படி அவருடைய உருவங்களை நான் வரைந்து வருகிறேன். மொத்தம் 114 உருவப் படங்களை வரைந்து வருகிறேன். இதுவரை 102 படங்களை வரைந்து முடித்துவிட்டேன். இன்னும் சில நாட்களில் மீதமுள்ள 12 படங்களையும் வரைந்து விடுவேன்’ என்றார்.
மகாராஜனின் தந்தை கணேசன் கூறுகையில், ‘எனது மகன் வரையும் பிரதமர் மோடியின் உருவ படங்கள் அனைத்தையும் அவன் படிக்கும் பள்ளியின் மூலமாக வருகிற 16-ந்தேதி மக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்துள்ளோம்.
17-ந்தேதி மோடியின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முந்தைய நாளில் படங்களை வெளியிட உள்ளோம். “மொத்தம் 39 அடி நீளம், 17.5 அடி அகலத்தில் HAPPY Birthday MODIJI என்ற வடிவத்தில் 114 ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.