இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுசரிப்பு
‘கொரோனா’ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தின நிகழ்ச்சிகள் பல கட்டுப்பாடுகளுடன் நடந்தன.
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், இரட்டை கோபுர தாக்குதலின்ம் 19வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அஞ்சலி வழக்கமாக உலக வர்த்தக மையத்தில் உள்ள நினைவிடத்தில், தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்துவர்.
ஆனால், இந்த ஆண்டு அதற்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, அங்குள்ள ‘ஸ்பீக்கர்’கள் மூலம் உயிரிழந்தோரின் பெயர்களை ஒலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் அந்த நினைவிடத்தில் கோபுரங்கள் இருப்பது போல் பிரகாசமான ஒளி பாய்ச்சப்படும். ஆனால், வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பென்டகனில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வழக்கங்கள் மாற்றப்பட்டதற்கு, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது கடத்தப்பட்ட பயணியர் விமானம், பென்சில்வேனியா மாகாணத்தில் விழுந்து நொறுங்கியது. அங்குள்ள நினைவிடத்திற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் சென்று மரியாதை செலுத்தினர். கடந்த 2001- செப்டம்பர் 11-ம் திகதி, அல்குவைதா பயங்கரவாதிகள், விமானங்களை கடத்தி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடம் மற்றும் ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ மீது மோதி வெடிக்கச் செய்தனர். அந்த பயங்கர தாக்குதலில் 2,900 பேர் உயிரிழந்தனர்.