கலிபோர்னியா காட்டுத் தீயில் 10 பேர் பலி
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/fairc349933a3c010ffcf85_16x9_1600-720x380-1.jpg)
அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியா மாகாண வனப் பகுதியில், தொடர்ந்து எரியும் காட்டுத் தீயில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா மலையின் அடிவாரத்தில், அடர்ந்த வனப் பகுதியில் கடந்த வாரம் தீப்பற்றியது. தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்பகுதியில், நேற்று முன்தினம் உருவான கடும் புகையால் ‘ஹெலிகாப்டர்கள்’ தீயணைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் புகை சூழ்ந்துள்ளதுடன், காற்றில் துாசி அதிகரித்துள்ளது. வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த காட்டுத் தீயில் ஏற்கனவே நால்வர் இறந்துள்ள நிலையில், மேலும் ஆறு பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான 16 பேரை தேடும் பணி தொடர்கிறது. இதனால், உயிர்ப் பலி அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே, தீயின் கோரப்பிடியில் சிக்கிய பெர்ரி கிரீக் நகரில் கார்கள், வீடுகள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் காணப்படுகின்றன.