நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிப்பு
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/Nawaz-Sharif-london-cafe.jpg.image_.845.440.jpg)
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த ஓராண்டு காலமாக மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், மற்றொரு முன்னாள் பிரதமரான யூசுப் ராசா கிலானியும் டோஷாகானா நிறுவனத்திடம் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்களை அவற்றின் விலையில் 15 சதவீதத்தை மட்டுமே செலுத்தி பெற்று ஊழல் புரிந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நீதிபதி சையது அஸ்கார் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப் மீதான வழக்கை தனியாக பிரித்தெடுத்த நீதிபதி, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். மேலும், இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரி, நவாஸ் ஷெரீப்பை பிரகடனப்படுத்திய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் வேண்டுமென்றே சட்டத்தின் செயல்பாட்டில் இருந்து தன்னை தவிர்ப்பது, தப்பி ஓடுவது, மறைப்பது என்று நடந்து கொண்டிருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்” என கூறினார். மேலும் நவாஸ் ஷெரீப் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். அத்துடன் அவரது அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் குறித்த பட்டியலை 10 நாளில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் ஆணை பிறப்பித்தார்.