சர்வதேச அரங்கில் 100 கோல்களை அடித்த ரொனால்டோ

சுவீடனுக்கு எதிரான போட்டியில் முதலாவது கோலை அடித்த போது போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 100 ஆவது கோலை அடித்தார்.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்ப்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குழு 03 இலுள்ள நடப்பு சம்பியன் போர்த்துக்கல் அணி, சோல்னா நகரில் நடைபெற்ற லீக் போட்டியொன்றில் சுவீடனை அதன் சொந்த மண்ணில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இரு கோல்களையும் போர்த்துக்கல் அணித்தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100 ஐ (165 ஆட்டம்) தொட்டது.

இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர், உலகளவில் இரண்டாவது வீரர் சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார்.

உலக அளவில் ஈரான் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான அலி டேஹ்ய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸி இதுவரை 70 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!