ரவிராஜ் படுகொலை விவகாரம் : போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக தனக்கு தொலைபேசி அழைப்பு வருவதாக சிஐடியைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி அமரவன்ச தெரிவித்தார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்; இதன் காரணமாக விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் எனவும் தன்னை அரசதரப்பு சாட்சியாக ஆஜராகுமாறும் சிஐடி அதிகாரி கேட்டுக்கொண்டார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.