ரணிலின் மனைவி அனுப்பிய வீடியோவிலேயே சஹ்ரானைப் பற்றி அறிந்துகொண்டேன்! – ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கும் நோக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். பெயரின் பின்னால் மறைந்து, மறைமுக சக்தியொன்றினால் நடாத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த நிலையில், தான் அவ்வாறானதொரு நிலைப்பாட்டினை வெளிப்படுத்த ஏதுவான காரணிகளை அவர் வெளிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது நாளாக சாட்சியம் அளிக்கும் போது, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.

‘சஹ்ரானின் பயங்கரவாதக் கும்பல் நேபாளம், கிர்கிஸ்தான், கசகஸ்தான் நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை தமக்கிடையே தொடர்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த சிம் அட்டைகள் சஹ்ரான் கும்பலுக்கு எப்படி கிடைத்தன? பிடியாணை தொடர்பில் பொலிஸார் அவர்களைக் கைதுசெய்யத் தேடினாலும், மாட்டிக் கொள்ளாதவாறு இருக்க யாரோ உதவி செய்துள்ளனர். அதனால் தான் நான் மறைமுக சக்தி ஒன்று உள்ளதாக சந்தேகிக்கின்றேன்.

இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் ஒன்றினை, ஒரே நேரத்தில் பல இடங்களில் நடாத்த, இந்தக் கும்பலுக்கு உள்நாட்டுக்குள் இருந்து மட்டும் உதவி கிடைத்திருக்கும் என நம்பமுடியாது. கண்டிப்பாக வெளிநாட்டுச சக்தியொன்றின் உதவி கிடைத்திருக்கும். அவர்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம்.

முன்னாள் தேசிய உளவுச்சேவைப் பிரதானி, இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்கு மூலத்தில், தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த குண்டுதாரி தொடர்பில் இரகசியமாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதிலும் சில விடயங்களை கூறியிருப்பார் என நினைக்கின்றேன். குறித்த குண்டுதாரி பிரபலமான ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்கச் செய்ய முயன்று, பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார்.

தாக்குதல் நடந்த பின்னர், இது குறித்து சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகம் எழுப்பியிருந்தனர். அதே சந்தேகம் எமக்கும் உள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் எமது நாடு ஸ்திரத்தன்மையை இழக்கும் போது, அதனூடாக நன்மையடைய முயலும் சக்தியொன்று பின்னணியில் இருப்பதாக நம்புகின்றோம்’ என ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றன.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சுச செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை மு.கா. தலைவர் ரவூப் ஹகீம், அரச சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்குப் பதிலளித்தவாறும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தவாறும், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சார்பிலான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவின் கேள்விகளுக்குப் பதிலளித்தவாரும் வாக்குமூலம் வழங்கினார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்த நிலையில், அவரின் நெறிப்படுத்தலிலும் ரவூப் ஹக்கீம் ஆணைக் குழுவுக்கு மேலதிக சாட்சியங்களை அளித்திருந்தார்.

நேற்று முன்தினம் மு.கா. தலைவர் ரவூப் ஹகீமினால் வழங்கப்பட்ட சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

ஜனாதிபதி ஆணைக்குழு:
இன, மத அடையாளங்களுடன் கூடிய பாடசாலைக் கட்டமைப்பு நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ளதாகவும், அது நீக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்க முடியுமான நிலைமை ஏற்படுத்தப்படல் வேண்டும் என ஆணைக்குழவில் சாட்சியமளித்த பலர் தெரிவித்தனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஹக்கீம்:
உண்மையில் நல்லிணக்கத்துக்கு இந்தப் பாடசாலைக் கட்டமைப்பு தடை என நான் கருதவில்லை. தத்தமது அடையாளத்தை பாதுகாத்து கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என கருதுவது கற்பனையே.

உண்மையில் இவ்வாறான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கான காரணத்தை முதலில் பார்க்க வேண்டும். அதன் பின்னர் தற்போதைய பாடசாலைக் கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்தே, அனைவருக்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் செல்ல முடியும் என்ற ரீதியிலான நிலைப்பாட்டுக்கு வர முடியும்.

அனைவரும் நியாயமான முறையில் நடாத்தப்படுவார்களேயானால், எவரும் எந்த பாடசாலையிலும் கற்கலாம் என்ற எண்ணக்கருவில் தவறில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு:
இன, மத பெயர் தாங்கிய கட்சிகள் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு என இங்கு சிலர் சாட்சியமளித்துள்ளனர். அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஹக்கீம்:
இவ்வாறு கட்சிகள் தோற்றம் பெற காரணம் என்ன? பல்வேறு அநீதிகளின் போது, அதற்கு எதிராக செயற்படவும் நியாயத்தைப் பெறும் நோக்கிலேயுமே பல கட்சிகள் தோற்றம் பெற்றன.

எமது கட்சியின் பெயர் முஸ்லிம் காங்கிரஸ் என இருந்தாலும் ,எங்கள் கட்சியிலும் சிங்கள வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். பெயரை மாற்றிவிட்டால் நல்லிணக்கம் ஏற்படும் என எண்ணினால் அது தவறு.

கட்சியின் பெயரை மாற்றினாலும் அக்கட்சியின் பெரும்பான்மையானவர்கள், அதன் கொள்கையை சார்ந்தே அக்கட்சியின் செயற்பாடுகள் இருக்கும். எனவே பெயரை மாற்றுவதால் நல்லிணக்கம் ஏற்படும் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெயர்ப் பலகையை மாற்றிவிட்டால் எல்லாம் மாறும் எனக் கருதுவது தவறு.

ஜனாதிபதி ஆணைக்குழு:
முழுவதுமாக முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவது தேசிய பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு என இந்த ஆணைக் குழுவில் சிலர் சாட்சியமளித்தனர். ஐரோப்பிய நாடுகள் பலவும் கூட அதனை தடை செய்துள்ளன. அப்படியானால் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?

ஹக்கீம்:
உண்மையில், சமய ரீதியாக பார்க்கும் போது முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என எதுவும் கட்டாயங்கள் இல்லை. முகத்தைத் திறந்து ஆடை அணியலாம். கலாசார, மத விழுமியங்களை பின்பறறும் போது ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் வகையில் அதற்கான தெரிவுகளை முன்னெடுக்கின்றனர்.

அதன்படியே சிலர், முகத்தை முழுமையாக மறைத்து ஆடையணிகின்றனர். ஐரோப்பிய நாடுகள் பல தடை செய்திருந்தாலும், குறிப்பாக இன்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடையினை அணிந்து பொது வெளியில் செல்வதை தடை செய்யவில்லை. அதனை அவர்கள், தனி நபர் ஆடை விருப்பமாக பார்க்கின்றனர்.

சில நாடுகள் அவற்றை பலாத்காரமாக தடை செய்துள்ளன. என்னைப் பொறுத்தவரை, பலாத்காரமாக இதனை தடை செய்வதை விட, அவ்வாறு ஆடை அணிவதில் இருந்து தவிர்ந்து இருப்பது சிறந்தது.

ஜனாதிபதி ஆணைக்குழு:
மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் உமது நிலைப்பாடு என்ன? அஹதியா பாடசாலைகள் சமயக் கல்வியைப் பெற போதுமானதல்லவா?

ஹக்கீம்:
அஹதியா என்பது பெளத்தர்கள், இந்துக்கள் செல்லும் தஹம், அறநெறிப் பாடசாலைகளின் வடிவமே. எனினும் பெளத்தர்களுக்கான பிரிவனாக்களை ஒத்தது மத்ரஸா பாடசாலைகள். அங்கு சமய ரீதியான விடயங்கள் முழு நேரமாகக் கற்பிக்கபப்டும்.

மத்ரஸா பாடசாலைகள் கண்டிப்பாக ஆனமீக கட்டமைப்பினை சீர்ப்படுத்த அவசியமானவை. அந்தப் பாடசாலைகள் தொடர்பில் தற்போது பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், கல்வி அமைச்சின் கீழ், ஒரு பாடத்திட்டத்துக்கு அமைய அல்லது மேற்பார்வைக் குழுவின் கீழ் அப்பாடசாலைகளை நடாத்திச் செல்வது தொடர்பில் சமூகத்துக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு:
சம்பிரதாய முஸ்லிம்கள் என்போர் சூபி முஸ்லிம்கள் தானே?

ஹக்கீம்:
சூபி முஸ்லிம்கள் மட்டும் சம்பிரதாய முஸ்லிம்கள் எனக் கூற முடியாது. இந்நாட்டில் வாழும், ஏனைய மதத்தவர்களையும் நம்பிக்கைகளையும் மதித்து, தமது மதத்தினை பின்பற்றும் எல்லா முஸ்லிம்களும் சம்பிரதாய முஸ்லிம்களே.

ஜனாதிபதி ஆணைக்குழு:
ஒரே சட்டம் எனும் விடயம் தொடர்பில் உமது நிலைப்பாடு என்ன?

ஹக்கீம்:
இப்போதும் நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டமே உள்ளது. அது எமது அரசியலமைப்பு சட்டம்.

ஜனாதிபதி ஆணைக்குழு:
சஹ்ரான் ஒரு அடிப்படைவாதி என எப்போது அறிந்து கொண்டீர்கள்?

ஹக்கீம்:
உண்மையில் 2019 பெப்ரவரி மாதம் அளவிலேயே சஹ்ரான் ஒரு அடிப்படைவாதி எனத் தெரியவந்தது. அப்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைதிரி விக்ரமசிங்க ஒரு வீடியோவை எனக்கு அனுப்பி, அதில் அந்நபர் பேசும் சகிக்க முடியாத கருத்துக்கள் தொடர்பிலும், யார் எவர் எனவும் ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போதே நான் சஹ்ரான் தொடர்பில் விசாரித்த போது, 2017 ஆம் ஆண்டு காத்தான்குடி மோதலை அடுத்து சஹ்ரான் தலைமறைவாக இருப்பதை அறிந்தேன். அதன் பின்னர் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணயிலும் அவர் இருப்பது தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அப்போது சி.ஐ.டி.யின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, சஹ்ரானை கைது செய்ய 50 குழுக்களை நாடு முழுவதும் நியமித்துள்ளதாக கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, முஸ்லிம்களின் திருமண வயது, முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டங்கள் தொடர்பில் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்,

தான் நீதி அமைச்சராக இருந்த போது, குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயன்ற போதும், சில கருத்து வேறுபாடுகளால் அது சாத்தியமற்றுப் போனதாகக் கூறினார். எவ்வாறாயினும் முஸ்லிம்களின் திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து தற்போது இல்லை எனவும் முஸ்லிம் பெண்களின் திருமண வயது உள்ளிட்ட திருத்தங்களுடன் தற்போதைய நீதி அமைச்சர் அச்சட்ட திருத்தத்தை முன்னெடுப்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவும், ஹக்கீமிடம் கேள்விகளை தொடுத்த நிலையில் முஸ்லிம்கள் நேரடியாக பங்களிப்பு செய்திருந்தால் சஹ்ரானை கைது செய்திருக்கலாம் அல்லவா என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஹக்கீம், கண்டிப்பாக கைது செய்திருக்கலாம். பாதுகாப்புத்தரப்பு முஸ்லிம்கள் மீது நம்பிக்கை வைத்து தகவல்களை பறிமாறியிருப்பின் சஹ்ரானை கைது செய்திருக்கலாம் என சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!