உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் வினைத்திறனாக செயற்பட வேண்டும் – வடக்கு ஆளுநர் வலியுறுத்து

உள்ளுராட்சி மன்றங்கள் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் கட்சி பேதங்களின்றி மக்களை மையப்படுத்திச் செயற்பட வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தினார்.

வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸுக்கும் அனைத்து உள்ளுராட்சி மற்றும் பிரதேச, நகரசபை அதிகாரிகளுக்குமிடயிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அக்கலந்துரையாடலில் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர், மாநகர சபை மேயர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபையின் முக்கிய உயிர்நாடிகள் உள்ளுராட்சி திணைக்களங்களே. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் தேவைகள் நிறைவுசெய்யப்படுவதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும். இதுவே எமது ஜனாதிபதியின் விருப்பம் ஆகும். ஆகவே மக்களின் தேவைகளை எவ்வாறு இலகுவாக்கி தவிசாளர்கள், உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரமூடாக கட்சிபேதமின்றி அனைவரும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.

வீதி புனரமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது வீதிகளின் நீள அகலங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். அத்துடன் வீதிகளின் அமைப்பிற்கு ஏற்றவாறு குறித்த வீதிகளில் பயணிக்கக் கூடிய வாகனங்களின் வேகம், கனரக வாகனங்கள் மற்றும் அது தொடர்பான அனைத்து விடயங்களையும் காட்சிப்படுத்த வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கே முக்கிய விடயமாக காணப்படும் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சபைகளின் உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தி எமது சூழலையும் நாட்டையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்

மக்களால் செலுத்தப்படும் வரிப்பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் சரியான வகையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, மக்களுக்குத் தேவையான இடங்களில் மட்டுமே கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சி திணைக்களங்களே மக்களின் அடிமட்டத் தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனங்கள். எனவே, அவர்களின் தலைமைத்துவம், ஆட்சிமுறை என்பன சரியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆயுள்வேத வைத்தியசாலைகளில் காணப்படும் வசதியீனங்கள் பற்றியும் அதனை நிவர்த்தி செய்வது தொடர்பான செயற்பாடுகளை சம்மந்தபட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். பாரிய சுமைகளுடன் இயங்கும் உள்ளுராட்சி சபைகள் தங்கள் பிரச்சனைகள் குறிப்பாக ஆதனவரி அறவீடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து கட்டாக்காலி விலங்குகள் (மாடு, ஆடு) போன்றவற்றை கட்டுப்படுத்தல், ஆறுகள், குளங்கள் பாதுகாத்தல், கிரவல்மண் அகழ்வு போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்தார்.

கடைகளின் உரிமை மாற்றம் மற்றும் அது தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆளணிப் பற்றாக் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அரசாங்க சுற்று நிரூபமூடாக தற்காலிகமாக அனைத்து ஆட்சேர்ப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருஇலட்சம் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முடிவடைந்த பின்னர் அதுதொடர்பில் கவனம் செலுத்தப்படுவுள்ளது.

வைத்தியசாலை கழிவுகளால் ஏற்படும் சூழல் மாசடைவு, தண்ணீர் பிரச்சினை, புகையிரத பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ள கிராமிய சிறு வீதிகள் பற்றிய பிரச்சினைகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!