கருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர் – சாடுகின்றார் மஹிந்த
“கருணா கொலைகளைச் செய்த காலத்திலும், அதன் பின்பும், இன்று வரையும் நல்லாட்சித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல் நாட்டைப் பிளவுபடுத்துவதாகும். கருணா கொலைகளைச் செய்வதைக் கைவிட்டுள்ள போதிலும், நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கைவிடவில்லை. அதனையே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
‘இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் 1970ஆம் ஆண்டு சோஷலிச அரசொன்று ஆட்சிக்கு வந்தபோது அது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசு என யாரும் கூறவில்லை. அதேபோன்று 1977ஆம் ஆண்டு முதலாளித்துவ அரசொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டபோது அது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசு என நாம் கூறவில்லை. எனினும், 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வரலாற்றில் நாம் ஒருபோதும் காணாத அளவில் வெளிநாட்டுத் தலையீடுகள் காணப்பட்டன.
2009ஆம் ஆண்டு நாம் போரை வெற்றிகொண்ட பின்பு இந்த நாட்டு அரசியலில் வெளிநாடுகள் கடுமையாகத் தலையீடு செய்யத் தொடங்கின. எமது நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் நாம் அந்தப் போரை வெற்றிகொள்வோம் என ஒருபோதும் நினைக்கவில்லை.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதுதான் முதலாவதாக இந்தத் தலையீடு இடம்பெற்றது. எனினும், இந்த நாட்டு மக்கள் அந்த முயற்சியை தீர்மானமிக்க வகையில் தோற்கடித்தனர். எனினும், 2015 வரை தொடர்ச்சியாக அந்தச் சூழ்ச்சி செயற்பட்டது. 2015இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதிப் போட்டியிலிருந்து விலகி பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தது யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2015 இல் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு எதிரி இராணுவமொன்று இலங்கையை ஆக்கிரமித்து அதிகாரத்தைப் பிடித்துக்கொண்டது போன்ற ஒரு நிலைமையே ஏற்பட்டது.
நாட்டைப் பிரிப்பதற்கு எதிரான மொத்த தேசியவாத முகாமையும் அவர்கள் தாக்கினர். இந்த நாட்டையும், நாட்டினரையும் பாதுகாக்கின்ற மகா சங்கத்தினரை அடிபணியச் செய்வதற்காக பிரதான பிக்குமாரைப் பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையிலடைத்தனர். விகாரைகளில் உள்ள யானைகளின் பின்னாலேயே அவர்கள் அதிகம் துரத்திச் சென்றனர்.
பௌத்தர்களின் பெரஹரா கலாசாரத்தை அகற்றுவதே அதன் நோக்கமாகும். தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாட்டைக் காத்த இராணுவப் படையைச் செயலிழக்கச் செய்வதற்காகக் கீழ்மட்ட இராணுவ வீரன் முதல் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி வரை தெரிவுசெய்யப்பட்ட முப்படை அங்கத்தவர்களைக் கைதுசெய்து, பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல வாரங்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக சிறையில் அடைத்து பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இவர்கள் படைவீரர்கள் அல்லர், இவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற கருத்தை இலங்கை மக்களின் உள்ளங்களில் பதித்து, உலகம் முழுவதும் அதனைப் பிரசாரம் செய்வதற்காகவே அவர்கள் அவவாறு செய்தனர்.
தேசியவாத முகாமைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு வழங்க முடியுமான சகல தண்டனைகளையும் வழங்கினர். விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தனர். பொலிஸுக்கு வரவழைத்தனர். பல மாதங்கள் விளக்கமறியலில் வைத்தனர். பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த நாட்டின் தேசியவாத முகாமை முழுமையாக அழித்து, புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றி, நாட்டைப் பிரித்து ஒரு முடிவைக் காண்பதற்காகவே இந்த அனைத்தையும் செய்தனர். போரால் செய்ய முடியாமல் போனதை இவ்வாறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் செய்ய முயற்சித்தனர்.
2019 நவம்பர் மாதம் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால், அந்தத் திட்டத்தை இறுதி வரை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும், உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்று சில நாட்களினுள் மேற்கத்தேய தூதரகமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் கடத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என அரங்கேற்றப்பட்ட பொய்யான நாடகத்தை நாம் அனைவரும் கண்டோம். புதிய அரசுக்கு மூச்சு விடுவதற்குக்கூட இடமளிக்க இந்தச் சூழ்ச்சியாளர்கள் தயாரில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.
2015 இல் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி சூழ்ச்சியாளர்கள் தமது வெளிநாட்டு முதலாளிமாருக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரமே 2015 ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமாகும்.
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களைச் செய்தனர் என்பதை ஏற்றுக்கொள்வதையே அதன் மூலம் முதலில் செய்தனர். அதன் பின்னர் அந்தப் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களை உள்ளடக்கிய விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு உடன்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்வதற்குப் போதிய சான்றுகள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களை நிர்வாக ரீதியான செயல்முறையொன்று மூலம் சேவையிலிருந்து அகற்றும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இலங்கை முப்படையினரின் உயிர்ப்பினை மழுங்கடித்து, செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
30/1 தீர்மானத்தின் பிரதான வாக்குறுதிகளைக் கூறியது போன்றே செயற்படுத்த முடியாமல் போயினும், அவற்றை வேறு வழிமுறையில் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கேனும் இடமளிக்காது, நல்லாட்சியாளர்கள் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்தைப் பலாத்காரமாக நிறைவேற்றினர். ‘அலுவலகம்’ எனக் கூறினாலும் உண்மையில் அது, அழைப்பாணையிடுவதற்கு, சாட்சியாளர்களை அழைப்பதற்கு, விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரமுடைய நியாயதிக்க சபையாகும். அதன் அதிகாரிகளுக்கு எந்தவொரு இராணுவ முகாம், பொலிஸ் நிலையம், சிறைச்சாலையையும் ஆணைப்பத்திரமின்றி சோதனை செய்து எந்தவொரு ஆவணத்தையும் அல்லது பொருளையும் தமது பொறுப்பிலெடுக்க முடியும்.
அரச இரகசியங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் புறம்பாயினும், உளவுப் பிரிவினர், இராணுவத்தினர் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இந்தக் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது சட்டப்படி கடமையாகும்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகா சங்கத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் கருத்தில்கொள்ளாது காணாமல்போகச் செய்வதற்கு எதிரான சர்வதேச சாசனத்தை இலங்கையில் வலுப்பெறச் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க சட்டத்தை நல்லாட்சியாளர்கள் நிறைவேற்றினர். உண்மையில் இதன் மூலம் காணாமல்போனவர்களைத் தேடுவது இடம்பெறுவதில்லை. இலங்கை இராணுவ அங்கத்தவர்களை வேட்டையாடும் பணியே இதன் மூலம் செய்யப்படுகின்றது.
இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கையினுள் காணாமல் ஆக்குதலொன்றைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரை வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தி, அவருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்குத் தொடர முடியும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியும்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், குற்றவியல் செயற்பாடுகளில் பரஸ்பர உதவிகளை வழங்கும் சட்டத்தில் நல்லாட்சி அரசு கொண்டு வந்த 24ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலம் வெளிநாடொன்றுக்கு அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையினுள் அவர்களுக்குத் தேவையான சந்தேகநபர்களை அல்லது சாட்சியாளர்களைக் கண்டறிய முடியும். அந்த வழக்குகளுக்குத் தேவையான சாட்சிகளை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கலாம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் போர்க் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கும் இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக தத்தமது நாடுகளில் வழக்குத் தொடருமாறு மேற்கத்தேய நாடுகளிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சியாளர்கள் வெற்றி பெற்றிருப்பின், இந்த அனைத்தையும் செயற்படுத்தி இலங்கையைத் தீர்த்துக் கட்டியிருப்பார்கள். இந்த உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தீர்மானமான முறையில் தோற்கடிக்க எமக்கு மிகவும் பலமான மக்கள் ஆணையொன்று தேவைப்படுகின் து.
2018 இன் இறுதியில் நல்லாட்சி அரசு இரண்டாகப் பிளவுற்று வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது தாம் உருவாக்கிய அந்த அரசைப் பாதுகாப்பதற்காக மேற்கத்தேய தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தில் அதிதிகள் மாடத்தில் அமர்ந்தவாறு, நல்லாட்சியின் சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் கைதட்டி, ஆரவாரத்துடன் உற்சாகமூட்டி ஒத்துழைப்பு வழங்கியமை உங்களுக்கு நினைவிருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் விடயங்களின்போது எப்போதும் பெரிய பிம்பத்தை மனதில் இருத்திக் கொள்ளுமாறு நான் பொதுமக்களின் வேண்டிக் கொள்கிறேன். நம் நாடு என்ற வகையில் எதிர்நோக்கியுள்ள சவாலுக்கு அமைவாக, அரசியல் ரீதியாக முக்கிய விடயங்கள் யாவை, முக்கியமல்லாத விடயங்கள் யாவை என்பதைப் பிரித்தறிய முடியாவிடின் நாம் அழிந்து விடுவோம்.
ஆறுமுகம் தொண்டமானின் மரண வீட்டில் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்பட்டதா, 2011 இல் யாராவது கிரிக்கட் போட்டி ஆட்ட மோசடியில் ஈடுபட்டார்களா போன்ற விடயங்கள் தொடர்பாக பலர் பலவாறான விடயங்களைக் கூறலாம். எனினும், அவை அரசியல் ரீதியாக முக்கியமானவை அல்ல.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தினோம்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்பு நாம் எதிர்நோக்க வேண்டியேற்பட்ட பாரிய பிரச்சினையே கொரோனா வைரஸ் தொற்று ஆகும். அந்தப் பாரிய பிரச்சினைக்கு சிறப்பாக முகங்கொடுத்தோமா என்பதுதான் இங்கு முக்கியமாகும்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் மத்தியில் நாம் முன்னிலை வகிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றேன். நியூசிலாந்துகூட எமக்குப் பின்னாலேயே உள்ளது.
2003 சார்ஸ் நோயின் பாதிப்பின் மூலமே வியட்நாம், ஹொங்கொங், தாய்வான் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டன.
எமக்கு அவ்வாறான பெரிய அனுபவங்கள் எதுவுமின்றியே நாம் கொரோனா வைரஸ் தொற்றை இந்தளவு கட்டுப்படுத்தியுள்ளோம்.
வெளிநாட்டிலிருந்து வரும் தொற்றுடைய ஒருவர் சமூகத்துக்குச் சென்றால் மாத்திரமே இங்கு கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஏற்படும். நல்லாட்சிக் கும்பல் அதிகாரத்தில் இருந்திருப்பின் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை இவ்வாறு கட்டுப்படுத்தியிருப்பார்களா? நாம் முக்கியமான விடயங்கள் யாவை, முக்கியமற்ற விடயங்கள் யாவை என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, எப்போதும் பெரிய பிம்பம் தொடர்பாக சிந்தித்தால் மாத்திரமே எமது மக்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்தபோது இராணுவ முகாம்களைத் தாக்கி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலை செய்தார் எனக் கூறினார் என்று நல்லாட்சி எதிர்க்கட்சியினர் துள்ளிக் குதிப்பதை நாம் அண்மையில் அவதானித்தோம். பெரிய பிம்பத்தை மறைத்து, வேறு விடயங்களைப் பெருப்பித்துக் காட்டுவது எவ்வளவு இலகு என்பது அதன் மூலம் வெளிப்படுகின்றது.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் ஜனாதிபதியான பின்பு, நாம் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்தொழித்தோம். கருணா அக்காலத்தில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் கைவிட்டு, புலிகள் அமைப்பிலிருந்து விலகி, இராணுவ உளவுப் பிரிவுக்கு அடிபணிந்தமையால் அவர் புலிகள் அமைப்புடன் அழிந்து போகவில்லை. பிரபாகரனின் சடலத்தை இனங்காண்பதற்கு நாம் கருணாவையே அனுப்பி வைத்தோம்.
‘கருணா இவ்வாறு கூறினார். அதனால் உங்களது பெறுமதியான வாக்கை நல்லாட்சித் தரப்பினருக்கு வழங்குங்கள்’ என்று கோரும் குழுவினர் செய்தவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இவர்கள் 1989 இல் பயங்கரவாதிகளின் மனதை வெற்றிகொள்வதற்காக முட்டாள்தனமாக பல ஆயுத லொறிகளையும், பணம் நிரம்பிய பல கோணிப் பைகளையும் புலிகள் அமைப்புக்கு வழங்கினர்.
அதன் பின்பு புலிகள் அந்த ஆயுதங்களைக் கொண்டே எம்மைத் தாக்கினர். 2002 இல் அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் பிரபாகரனுக்கு எழுதிக் கொடுத்தனர். நல்லாட்சி அரசின் காலத்தில் நாட்டைப் பிரிப்பதற்காக புதிய அரசமைப்பொன்றை வரைவு செய்தனர். அதன் பின்பு அந்தப் பிரிவினைவாத அரசமைப்பின் கோட்பாடுகள் அனைத்தையும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கினர்.
கருணா கொலைகளைச் செய்த காலத்திலும், அதன் பின்பும், இன்று வரையும் நல்லாட்சித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல் நாட்டைப் பிளவுபடுத்துவதாகும். கருணா கொலைகளைச் செய்வதைக் கைவிட்டுள்ள போதிலும், நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கைவிடவில்லை. அதனையே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் கருணா கூறியவை தொடர்பாக தற்போது சி.ஐ.டியினரால் விசாரணையொன்று நடத்தப்படுகின்றது. எனவே, சிறிய பிம்பத்தை அவதானித்தவாறு, பெரிய பிம்பத்தை நாம் சிறிதளவேனும் மறந்து விடுவோமாயின் அழிவுதான் ஏற்படும். அதனால்தான் எப்போதும் சிறிய பிம்பத்தை நோக்காது, பெரிய பிம்பம் தொடர்பாகவே அவதானம் செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.
சிறிய சில்லறை விடயங்களின் அடிப்படையில் வாக்களிப்போமாயின், எமது நாடு, நாட்டினம், சமயம், கலாசாரம், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் அனைத்தும் இல்லாமல்போய் விடும். இந்த நாட்டை யாருக்கு சிறப்பாக ஆட்சி செய்ய முடியும், பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யார், யாருக்கு தீவிரவாதத்தை ஒழித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் யார், எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக வாழ முடியுமான, பெருமையடைய முடியுமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியவர்கள் யார்? போன்றவை தொடர்பான கேள்விகளையே மக்கள் எப்போதும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவற்றுக்கான பதில் யாது என்பதை நான் கூற வேண்டியதில்லை. அதனை சகல இலங்கையரும் அறிவார்கள்” – என்றார்.