மிதவை மூலம் இலங்கை வர முற்பட்டவர்கள் இந்தியாவில் கைது
இந்தியாவில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக மீள வர முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர், இந்தியாவில் நேற்று (06) கைதுசெய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஹம்மது அலி (வயது 43) என்பவர் உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு விமானம் மூலம் இந்தியா – தமிழகம் சென்றுள்ளார். விசா முடிந்த பின்னரும் நாட்டுக்குத் திரும்பாமல் தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமில் சட்டவிரோதாகத் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், முஹமது அலி மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் நோக்கத்தில், ஏர்வாடிக் கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தி, மிதவையொன்றைத் தயார் செய்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதி மீனவர்கள், இது குறித்த ஏர்வாடி பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ஏர்வாடி பொலிஸார், முஹமது அலி, அவருக்கு உதவிய சகேதரர் முஹமது அசன் (வயது 35), நண்பர் சாகுல் ஹமீது (வயது29) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அத்தோடு, அவர்களிடம் இருந்த மிதவையையும் பறிமுதல் செய்தனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யுத்தம் காரணமாக தமிழகம் வந்ததாகவும், தற்போது உடல் நிலை சரியில்லை, மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால், மீண்டும் மன்னார் வளைகுடா கடல் வழியாக மிதவை மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளும் கடத்தப்பட்டு வருவதாகவும் எனவே மேற்படி சந்தேகநபர்கள் மூவரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ஏர்வாடி பகுதியில் பதுங்கி இருந்தனரா என்ற கோணத்தில், இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து இந்திய, இலங்கை ரூபாய்கள், கடவுச்சீட்டுகள், இலங்கைக் குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.