மலையகத்துக்குத் தலைமை தாங்கத் தயார் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அறிவிப்பு
“மலையகத்துக்குத் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்றனர். எனவே, மக்களின் ஆணை ஏகோபித்த நிலையில் இருப்பதால், அதனை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எனது உறவுகளின் தீர்மானத்தின் பிரகாரம் மலையகத் தலைமையை ஏற்கத் தயாராகவேயுள்ளேன். எனது உறவுகள் எதுவித காரணங்களுக்காகவும் எவருக்கும் அஞ்சவோ, பின்வாங்கவோ அவசியமில்லை. அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் எனது உறவுகளுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளுக்கெதிராக நீதிமன்றம் வரை சென்று தலைமை தாங்கவும் பின்னிற்க மாட்டேன்.
இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் துரதிஷ்ட வசமாக எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இந்தநிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான தார்மீகக் கடமை எனக்குண்டென்பதை நான் அறிவேன்.
இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்மை விட்டுப் பிரிந்து விட்டாரென்று, மலையக மக்களை ஆட்டிப் படைக்கலாம், அடிமைகளாக வைத்திருக்கலாம், வஞ்சிக்கலாமென்று எவரும் நினைப்பார்களேயானால் வடிவேல் சுரேஷ் அதனை எதிர்த்து ‘தசாவதாரம்’ எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எமது மக்களையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கு எந்த எல்லை வரையும் நான் செல்வேன்” – என்றார்.