குட்டிமணியின் மனைவி காலமானார்
ரெலோ அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ரெலோ அமைப்பின் செயலதிபருமான குட்டிமணியின் (யோகச்சந்திரன் இராசரத்தினம்) மனைவியான திருமதி இராசரூபராணி இராசரெத்தினம் இன்று லண்டனில் தனது 69 வயதில் காலமானார்.
1960களின் கடைசியில் இருந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த குட்டிமணி, 1979 ஆம் ஆண்டில் இருந்து ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகச் செயற்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல முக்கியஸ்தர்களுடன் இணைந்து செயற்பட்டுவந்த குட்டிமணி 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
மரணதண்டணை விதிக்கப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி 1983 ஜுலை இனவன்முறை நேரத்தில் கொல்லப்பட்டார்.
குட்டிமணி சிறையில் இருந்த காலப்பகுதியில் 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதி பாராளுமன்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியால் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். யாழ் வட்டுக்கோட்டை தொகுதியின் உறுப்பினர் திருநாவுக்கரசு மரணமானதை அடுத்து அவருடைய இடத்திற்கு குட்டிமணியை த.வி.கூட்டணி நியமித்திருந்தது. ஆனாலும் சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதி வழங்கப்படாததன் காரணமாக அவரால் பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் எடுக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.