கப்பல் மூழ்கியதால் 41 பேரும் மாடுகளும் பலி
ஜப்பான் அருகே, கால்நடைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த, 41 பேரும், 5,800 மாடுகளும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
இது குறித்து, ஜப்பான் கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர், யுசிரோ ஹிகாஷி கூறியதாவது:
“நியூசிலாந்தில் இருந்து, 5,800 மாடுகளுடன், ‘கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற கால்நடை கப்பல், சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது. கிழக்கு சீன கடலில், ஜப்பானைச் சேர்ந்த, அமாமி ஒஷிமா கடலோர பகுதியில் சென்ற போது, கடுமையான கடல் சீற்றத்தை சந்தித்துள்ளது.அதற்கு முந்தைய நாளில், ‘மேசெக்’ புயல் கரையை கடந்ததால், கடல் சீற்றமும், ஆர்ப்பரித்து எழும்பிய அலைகளும், கப்பலை மூழ்கடித்துள்ளன. அதற்கு முன், கப்பலில் இருந்து உதவி கோரி, ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் வந்து உள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்கு ரோந்து ஹெலிகாப்டரில் சென்ற வீரர்கள், கடலில், மிதவை துணையுடன் கையசைத்த படி உதவி கோரிய ஒருவரை கண்டு, அவரை காப்பாற்றினர். பிலிப்பைன்சை சேர்ந்த அவரை விசாரித்ததில், கப்பலில், அவருடன், பிலிப்பைன்சை சேர்ந்த, 37 பேர் உட்பட, 42 பேர் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கப்பல் மூழ்கியதில், அதில் இருந்த, 5,800 மாடுகள் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது” – இவ்வாறு அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின்,’கல்ப் நேவிகேஷன் ஹோல்டி’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த கப்பல், கடந்த மாதம் நியூசிலாந்தின் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.சீனாவின், தங்ஷன் துறைமுகத்திற்கு செல்லவிருந்த வழியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது.