விமானத்துறையில் அரை மில்லியன் பேர் வேலை இழக்கக்கூடும்
கொரோனா கிருமிப் பரவல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விமானத் துறையில் கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 350,000 பேர் வேலையிழந்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாண்டின் இறுதியில் விமானத் துறையில் அரை மில்லியன் பேர் வேலையிழக்கக்கூடும் என்கிறது ஆய்வு.
விமான நிறுவனங்கள், விமானத் துறை உற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள் போன்ற விமானத் துறையோடு நேரடித் தொடர்பு இல்லாத துறைகளில் சுமார் 25,000 வேலையிழப்புகளும் முறையாக அறிவிக்கப்படாத 95,000 வேலையிழப்புகளும் இந்த அரை மில்லியனில் அடங்கும் என்கிறார் ஆய்வு முடிவுகளைத் தொகுத்த ஃபைவ் ஏரோ நிறுவன துணை நிறுவனரான ரோலண்ட் ஹேலர்.
கொரோனா கிருமித்தொற்று அதிகரிப்பால், பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில், விமானப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருப்பதாக அவர் சொன்னார்.
இதுவரை அறிவிக்கப்பட்ட வேலையிழப்புகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான வேலையிழப்புகள் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் நேர்ந்தவையாகும்.
விமானப் பாக உற்பத்தி நிறுவனங்கள், பல முக்கிய விநியோகிப்பாளர்கள் மேற்கத்திய நாடுகளில் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும், அதேசமயம் ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு குறைவாக உள்ளது என்றும் ஹேலர் கூறினார்.
ஒருவேளை ஆசிய நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கத் தயங்கக்கூடும் என்ற அவர், ஆனால் சீனா மற்றும் பிற நாடுகள் ஆட்குறைப்பு பற்றிய தகவல்
களைத் தெரிவிக்காமல் இருப்பதும் ஒரு பிரச்சினை என்றார்.
கேத்தே பசிபிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதால், ஆட்குறைப்பு பற்றிய திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் வரும் நாட்களில் அந்நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு இருக்கக்
கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.