ட்ரம்ப்பிடம் மிட்டாய் வாங்கிச் சாப்பிடத் தயங்கிய கிம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராண்டுகளுக்கு முன்னர் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைச் சிங்கப்பூரில் சந்தித்தபோது அவருக்கு சில ‘டிக் டேக்’ (Tic Tac) மிட்டாய்களைக் கொடுத்திருந்தார்.
“அப்போது கிம்மின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. இது ஏதோ தன்னை நஞ்சு வைத்து கொல்லும் சதி என எண்ணியிருப்பார் போலும். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் சற்று திணறியது போல இருந்தது,” என்று ட்ரம்ப்பின் முன்னாள் உதவியாளர் சேரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.
கிம்மின் தயக்கத்தைக் கண்டு நகைத்த ட்ரம்ப், அதே சிறு மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்த பேழையிலிருந்து சில மிட்டாய்களை எடுத்து தம் வாய்க்குள் போட்டுக்கொண்டார். ஆபத்தில்லை என்பதை உணர்ந்த கிம், இறுதியில் ட்ரம்ப் வழங்கிய மிட்டாய்களை ஏற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரில் அவ்விரு தலைவர்களுக்கு இடையே நடந்தவற்றை மிகவும் விரிவாக தமது புதிய நூலில் எழுதியிருக்கிறார் முன்னாள் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சேரா சாண்டார்ஸ்.
ட்ரம்ப் பலமுறை பொய்யுரைத்திருப்பதாகக் கூறும் அவரது விமர்சகர்கள் திருமதி சாண்டர்சைப் பற்றி கிட்டத்தட்ட அதே குறைகூறல்களையும் முன்வைத்துள்ளனர். ட்ரம்ப்போ, சாண்டர்சை தமக்கு மிக நெருக்கமான ஆதரவாளராகக் கருதினார். ட்ரம்ப்பை விட்டுக்கொடுக்காமல் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாக பேசி வந்த சாண்டர்ஸ், ட்ரம்ப்பால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்ததாகக் கூறினார்.
‘ஸ்பீகிங் போர் மைசெல்ப்’ (Speaking For Myself) என்ற தமது புத்தகத்தில் சாண்டர்ஸ், ட்ரம்ப்புடன் தாம் பணியாற்றிய அனுபவத்தையும் தமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் விவரித்துள்ளார்.