“20” ஆவது திருத்தம் – உள்ளடக்கம் என்ன?

🟥 அரசமைப்பு பேரவை ‘அவுட்’

🟥 நாடாளுமன்ற பேரவையில் சிவில் பிரதிநிதிகளுக்கு இடமில்லை.

🟥 2 சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கம்.

🟥 ஓராண்டு முடிந்ததும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியும்.

🟥 உயர் நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம்.

🟥 பிரதமரைக்கூட ஜனாதிபதி நீக்கலாம்.

🟥 ஜனாதிபதி கபினெட் அமைச்சராக இருக்கலாம்

🟥 ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான வயதெல்லை 30

🟥 அரசியலமைப்பில் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புக்களில் முரண்பாடு காணப்படுமிடத்து சிங்களமே சரியாக கொள்ளப்படும்

🟥 இரட்டைக்குடியுரிமையுள்ள இலங்கையர் எவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம்

நாட்டில் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரம் நிரம்பிய ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலேயே அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலில் இது அம்பலமாகியுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. 19 வருவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்க வேண்டும் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமக்குத் தேவையான விதத்தில் அமைச்சர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குக் கிட்டும்.

அதுமட்டுமல்ல பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்குவதற்கும், எந்தவொரு அமைச்சையும் தனக்குகீழ் கொண்டுவருவதற்கான அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குள் சென்றடையும். 19 அமுலுக்கு வருவதற்கு முன்னரும் இதே நிலைமை காணப்பட்டது.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வரவும் முடியாது என்ற நடைமுறையும் 20 ஊடாக நீக்கப்படவுள்ளது.

உயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் அரசமைப்பு பேரவை நீக்கப்பட்டு, நாடாளுமன்றப் பேரவை என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு பேரவையில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூன்று சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், நாடாளுமன்ற பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர், பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற பேரவையில் பிரதம அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரின் பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி என 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள், இரண்டு தடவைகள் மாத்திரமே அந்தப் பதவியை வகிக்கலாம் என்ற 19 இன் ஏற்பாடு 20ஆவது திருத்தச் சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட 19 இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஏனையவை அதேபோன்று தொடரும். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களைத்  தெரிவுசெய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. தலைவரையும் அவரே நியமிக்கலாம்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ள நிலையில், வர்த்தமானியிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூகக் கருத்தாடலுக்காக இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும். ஏதேனும் சர்ச்சைகள் இருப்பின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதன்பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போதுகூட தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனவே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ’20’ இறுதிப்படுத்தப்பட்டது அல்ல. திருத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

தேசிய கீதம், தேசியக் கொடி, ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை உட்பட அரசமைப்பிலுள்ள 12 விடயங்கள் சார்ந்தவற்றுடன் தொடர்புடையவற்றை மாற்றுவதாக இருந்தாலே சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும். எனவே, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 20ஐ நிறைவேற்றலாம். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தேவை எழவில்லை என சட்டமா அதிபரும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறிய பின்னர் அதில் சபாநாயகர் கையொப்பம் இடும் தினத்தில் இருந்து சட்டம் நடைமுறைக்கு வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!