அமைதிப் பேச்சுவார்த்தைக்காக 200 தலிபான்களை விடுவித்த ஆப்கான்
தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கான் அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஆப்கான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாகவே தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கான் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
பக்ரீத் திருநாளை முன்னிட்டு அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக்கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையேயும் தலிபான்கள் அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.