அனைத்து நாட்டு விமானங்களுக்கும் அனுமதியளித்த சவுதி அரேபியா
அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரகத்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிலிருந்து முதல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இயக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை சவுதி அரேபிய அரசு இன்று அறிவித்துள்ளது. ஆனால், சவுதி அரேபியாவின் வைரிகளான ஈரான், கட்டார் ஆகிய நாடுகளின் விமானங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதியிருக்கிறதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே விமானப் போக்குவரத்துச் சேவை தொடங்கியுள்ள நிலையில் இனி சவுதி அரேபிய வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஐக்கிய அரபு அமீரக அரசு தங்கள் நாட்டிலிருந்து விமானங்கள் பறக்கவும், வரவும் வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரி வேண்டுகோள் விடுத்ததால், சவுதி அரேபியா அனுமதியளித்துள்ளது என சவுதி பிரஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.