சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஃபோன் வாங்கிய தந்தை
கொலைக் குற்றத்திற்காக தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கு சம்பாதித்த பணத்தை வைத்து தனது மகள் ஆன்லைன் வகுப்பை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் வாங்கித் தந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அருகே உள்ள ஆம்தாரா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் நாகேஷியா என்பவர் குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக 2005ஆம் ஆண்டு தனது மாமா ஒருவரைக் கொலை செய்துவிட்டார்.
தற்போது 40 வயதாகும் அவர் 15 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை கழித்த பின்பு சமீபத்தில் விடுதலையானார். நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடியும் முன்பே அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலையான அவருக்கு வீட்டிலிருந்து நிலமை உவப்பானதாக இல்லை.
தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகள் யாமினி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் படிக்க செல்பேசி எதுவும் இல்லாமல் இருப்பது குறித்து அவர் அறிந்தார்.
“படிப்பதற்காக என் மகளிடம் செல்பேசி இல்லை என்பதே எனக்கு வருத்தமாக இருந்தது. அவள் படித்து மருத்துவராக விரும்புகிறாள். சிறையிலிருந்த போது கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரிந்தது,” என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.