எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை; சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் – கருணா
“தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக நான் இருந்தவேளை வடக்கிலும், கிழக்கிலும் இராணுவத்துடனான மோதல்களின்போது எனது தலைமையில் பல வெற்றிகள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் ஆனையிறவு வெற்றி. இது தொடர்பில் என்னிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்குமூலம் பெற்றனர். எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதையும் செய்யாமல் சொல்ல வேண்டிய அனைத்து விடயங்களையும் அவர்களிடம் சொல்லிவிட்டேன்.”
– இவ்வாறு கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
“நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டமைக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சிறை செல்ல எந்நேரமும் தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் மேலும் கூறினார்.
கருணாவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று 7 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் பதிவுசெய்தனர். அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பலகோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டன.
ஆனையிறவு சமரின்போதும் ஒரே இரவில் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாக கருணா வெளியிட்டிருந்த கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் இதுவே பேசுபொருளாக மாறியுள்ளது. அத்துடன், கருணாவுக்கு எதிராகப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கருணா வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் கடந்த 22 ஆம் திகதி பணிப்புரை விடுத்திருந்தார். இதன்படி வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு கருணாவுக்கு சி.ஐ.டியினர் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விசேட விசாரணைக்குழுவொன்றை அனுப்பவும் ஏற்பாடுகள் இடம்பெற்றன.
எனினும், 22 முதல் 24 ஆம் திகதிவரை விசாரணைக்கு வருவதை கருணா தவிர்த்து வந்தார். கடைசியாக சுகவீனம் அடைந்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக சி.ஐ.டியினருக்கு தெரியப்படுத்தினார். இந்நிலையில் இன்றைய தினம் முன்னிலையாகாவிட்டால் கருணாவைக் கைதுசெய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று முற்பகல் 10.30 மணியளவில் சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வருகை தந்தார் கருணா. அதன்பின்னர் அவரிடம் மாலை 5.30 மணிவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.