அரசமைப்பு திருத்தத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த சாசன செயலணி
“அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவசரப்பட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம்.”
– இவ்வாறு பௌத்த சாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பௌத்த சாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முற்படுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது எனப் பௌத்த மதகுருமார்களை உள்ளடக்கிய பௌத்த சாசன செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.
“தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசு தேர்தல் முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அரசமைப்பின் 13ஆவது மற்றும் 19ஆவது திருத்தங்களால் உருவாகியுள்ள ஆபத்துக்களை அரசு நீக்க வேண்டும்” எனவும் பௌத்த சாசன செயலணி ஜனாதிபதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.