சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு செப்டெம்பரில் விசாரணை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, மேலதிக விசாரணை நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனக் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது அமைச்சின் சாரதியாக கடமையாற்றிய திலும் துஷித குமார, சம்பவம் இடம்பெற்ற வேளையில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திலும் துஷித குமார மற்றும் சுதத் அஸ்மடல பிரதிவாதிகள் தொடர்பில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பிணை தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டது.  

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட WP KP 4575 எனும் ஜீப் வாகனத்தைப் பாதுகாப்பாற்ற முறையில் செலுத்தி சங்திப் சம்பத் என்பவர் மீது விபத்தை ஏற்படுத்தியமை, அவ்விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல் தப்பிச் சென்றமை, படுகாயம் ஏற்படுத்தியமை, சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!