அரசமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்தானந்த நியமனம்
அரசமைப்பு பேரவைக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவை தனது பிரதிநிதியாக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.
10 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்பு பேரவைக்கு பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி ரீதியாக உள்ளீர்க்கப்படுவார்கள். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் , சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்னும் பெயரிடப்படவில்லை.
கடந்த அரசின்போது நியமிக்கப்பட்ட ஜாவிட் யூசுப், பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார் ஆகியோர் தொடர்ந்து அரசமைப்பு பேரவையின் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
கலாநிதி ஜயந்த தர்மபாலா பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.
புதிய அரசு பதவிக்கு வந்த போதிலும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மாற்ற முடியாது என்பதோடு, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய, அவர்கள் நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வரை அவர்களை நீக்க முடியாது என்று ஒரு பிரிவு உள்ளது என்பதே இதற்குக் காரணம்.
இதேவேளை, புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற செயலமர்வு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. பாராளுமன்ற நூலகத்தைப் பயன்படுத்துவது பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று தெளிவுபடுத்தப்பட்டன.