கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா பதவிகளில் மாற்றம் எதுவும் இல்லை
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் (கொறடா) ஆகிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய இரு பதவிகள் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆங்கில ஊடகத்தால் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“இந்தச் செய்தி முற்றிலும் தவறானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறும்போது பாராளுமன்றக் குழுவின் தலைவர் (கொறடா), ஊடகப் பேச்சாளர் ஆகிய பதவிகளுக்குரிய நியமனங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். எனினும், தற்போது வரையில் இந்தப் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை” – என்றுள்ளது.