ராஜ்பக்ச ஆட்சியில் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு மீண்டும் திரும்புகிறதா?- சம்பிக்க
“கடந்த 2013ஆம் ஆண்டில் சர்வாதிகாரப் போக்கிலான 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட முன்னதாக 17 ஆவது திருத்தம் நீக்கப்பட்டது. தற்போது அதே அரசால் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, புதிய அரசமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்துப் பேசப்படுவதானது நாடு சர்வாதிகாரப்போக்கிலான வரலாற்றுக்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியா?”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டைப் பொறுத்தவரையில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் ஒரு சாபக்கேடாக இருக்கின்றது என்றும், நாட்டின் மிக முக்கிய அடிப்படைகளாக இருக்கின்ற பொருளாதாரம், பாதுகாப்பு, ஜனநாயகம் ஆகிய மூன்றையும் இது வலுவிழக்கச் செய்திருக்கின்றது என்றும் கூறியிருக்கும் ஆளுந்தரப்பு, இவ்வருட இறுதிக்குள் அந்தத் திருத்தத்தை நீக்கி புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர இருக்கின்றது என்றும் அறிவித்திருக்கின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரக் குறைப்பு, சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், அரசமைப்புப் பேரவையின் அறிமுகம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளடங்கலாக பல்வேறு ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த 19 ஆவது திருத்தம் நீக்கப்படப்படுவதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“தற்போது ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் அரசு, இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் அதன் ஆட்சிக்காலத்தின்போது அரசமைப்பில் முற்போக்கான திருத்தங்களை ஏற்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். எனினும், சர்வாதிகார முறையொன்றை நோக்கிச் செல்வதற்கு ஏதுவான அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அரமைப்பின் 17ஆவது திருத்தத்தை நீக்கினார்கள்.
இந்தநிலையில், தற்போதும் அதே அரசின் பிரதிநிதிகள் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி, அதன் பின்னர் புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வருவது பற்றிப் பேசுகின்றார்கள். அவ்வாறெனின் வரலாறு மீண்டும் திரும்புகின்றதா?” – என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.