கருணாவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகக் போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
“பல வருடங்களுக்கு முன்னரே அவரைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இலங்கையின் போரின்போது படையினரைப் பெருமளவில் கொலை செய்ததாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்” எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“கருணா அம்மான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போதிலும் அதன்பின்னர் விலகி அரச சார்பு ஆயுத குழுவுக்குத் தலைமை தாங்கிய வேளையிலும் பெருமளவு மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருந்துள்ளார். சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள், சித்திரவதை செய்தல், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அவர் மேற்கொண்டுள்ளார்.
கருணா அம்மானின் தலைமையின் கீழ் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் கிழக்குப் படையணியினர் 1990ஆம் ஆண்டு ஜூனில் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரச சார்பு ஆயுத குழுவுக்குத் தலைமை தாங்கிய வேளையும் அவரது குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை.
மாறாக அரசின் சார்பில் அவரது படைப்பிரிவினர் மேலும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.
கருணாவை ஒருபோதும் அவரது குற்றங்களுக்காகப் பொறுப்புக்கூறச் செய்யவில்லை.
2007இல் அவர் போலியான ஆவணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டார். அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச போலிக் கடவுச்சீட்டை வழங்கினார் என கருணா வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
எனவே, கருணாவைப் போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்களுக்காக விசாரணை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதே போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளதன் காரணமாக கருணா நீதியின் பிடியிலிருந்து தப்பக்கூடும்” – என்றார்.