காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு
“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் (ஆகஸ்ட் 30) வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்குப் பூரண ஆதரவு வழங்குவோம்.”
– இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் பொதுமக்களை இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாத அரசு நாட்டில் அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படும்போது தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பது சாத்தியமாகும்.
அதனால், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளுமாறு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும் இந்தப் போராட்டங்களில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை முழுமையான ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
வடக்கு மாகாணத்தில் யாழ். பஸ் நிலையத்தில் இருந்து பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணி யாழ். மாவட்ட செயலகம் வரை சென்று அங்கே ஐ.நாவிடம் மகஜர் ஒன்று கொடுக்கப்படவிருக்கின்றது. அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கல்லடிப் பாலத்தில் இருந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணி காந்தி பூங்கா வரை சென்று ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றைக் கையளிக்கவிருக்கின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருந்து மேற்படி பேரணிகள் பெரு வெற்றியடைய தமது ஆதரவை வழங்க வேண்டும்!” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.