நாட்டைப் பிளவுபடுத்த விக்கி, கஜன் முயற்சி – சரத் வீரசேகர
“பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நாட்டை பிளவுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றனர்.”
– இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.
இதனடிப்படையிலே அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று உத்தியோகபூர்வமற்ற சத்தியப் பிரமாணத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டவர்கள் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம் என்று எவ்வாறு நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணத்தைச் செய்திருக்க முடியும் எனக் கேள்வியெழுப்பவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இவர்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் பேசுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் கூறினார்.