அபுதாபி பட்டத்து இளவரசர் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை
அமீரகம்-இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் காரணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் இமாம்கள் பேரவை தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறியதாவது:-
”அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் செய்து கொள்ளப்பட்டது. இது அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும். இத்தகைய ஒப்பந்தம் காரணமாக உலகில் அரபுக்கள் மீதான மதிப்பும், மரியாதையும் உயர்ந்து உள்ளது. மேலும் இஸ்லாத்துக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் அமீரகம், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இருந்துள்ளார். இதனால் அவரது பெயரை உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல் அமைதிப் பரிசு கிடைப்பதற்காக பரிந்துரை செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” – என்றார்.
இது அவருக்கு மிகவும் தகுதியான ஒரு பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் பணிகளை செய்து வருகின்றன. இந்த பரிசு அபுதாபி பட்டத்து இளவரசருக்கு கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.