பத்தொன்பதாவது திருத்தம் போனால் ஏழரை வருமா?

இலங்கையின் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்வதற்குப் புதிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்ற செய்தி, அண்மைய நாட்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. செய்திகளில் அச்சமூட்டப்பட்டதைப் போல, இன்றோ, நாளையோ இது நீக்கப்படாது என்ற போதிலும், அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில், அவர்களின் விருப்புக்கேற்ப இம்மாற்றம் விரைவாக ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன.

இந்த 19ஆவது திருத்தம் நீக்கப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அதில் எந்தெந்தப் பகுதிகளை நீக்கப் போகிறது அல்லது முற்றுமுழுவதுமாக நீக்கப் போகிறதா என்பது தொடர்பில் தெளிவுகள் இல்லை. அதேபோல், 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்போது, என்ன மாதிரியான புதிய விடயங்கள் உள்வாங்கப்படுமென்பதுவும் உறுதியில்லை. இப்போதிருக்கும் அநேகமான உரையாடல்கள், எதிர்பார்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன.

கடந்த அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இந்த 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இருந்தாலும், அதன் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படும் நிலை உருவாகியுள்ளது.

பத்தொன்பதாவது திருத்தத்தைப் பற்றி ஆராய வேண்டுமானால், அதை 18ஆவது திருத்தத்தோடு ஒப்பிட வேண்டியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், 18ஆவது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டதை மாற்றும் வகையில், அதைச் சரி செய்யும் வகையில்தான் 19ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, 19ஆவது திருத்தமென்பது, ஜனாதிபதியின் அதிகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.

அதில் ஒரு பகுதியாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது அமைந்திருந்தது. மற்றைய பகுதி, நாடாளுமன்றத்தின் (பிரதமர் உள்ளிட்டதாக) அதிகாரங்களைப் பலப்படுத்துவதாக அமைந்திருந்தது. மூன்றாவது பகுதியாக, சுயாதீன ஆணைக்குழுக்களை மீள நிறுவுவது சம்பந்தமாக அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில், இவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுவதைப் பார்க்கலாம்.

ஜனாதிபதிப் பதவியை ஒருவர் வகிக்கக்கூடிய அதிகபட்சத் தடவையாக இரண்டு தடவைகள் என்ற எல்லை மீளவும் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடு, 18ஆவது திருத்தம் மூலமாக நீக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தான் விரும்பிய நேரத்தில் பிரதமரை நீக்கலாம் என்ற அதிகாரம் நீக்கப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் என்று ஜனாதிபதி கருதுகின்ற ஒருவரைப் பிரதமராக நியமிக்க முடியுமென்ற போதிலும், அவரை நீக்குவதற்கு இயலாத நிலைமை ஏற்பட்டது. பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், இதன்மூலமாக நாடாளுமன்றத்துக்குச் சென்றது. அதேபோல், அமைச்சர்களைப் பிரதமரின் ஆலோசனையின்பேரில் நியமிக்க வேண்டும் எனக் கூறுகின்ற இத்திருத்தம், அவர்களை நீக்குவதற்கும் பிரதமரின் ஆலோசனையைக் கருத்திற்கொள்ள வேண்டுமெனக் கூறுகிறது.

முக்கியமான இன்னொரு விடயமாக, அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதியே தொடர்ந்து செயற்பட்டாலும்கூட, எந்த அமைச்சுப் பதவியையும் அவர் வகிக்க முடியாது.

இவற்றுக்கு மேலதிகமாக, சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களை/நீதிபதிகளை நியமிக்கும்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றனவும், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகின்றன.

இன்னொரு மிக முக்கியமான மாற்றமாக, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி எப்போது கலைக்க முடியும் என்பதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் இருந்தது. முன்னைய ஏற்பாட்டின் அடிப்படையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ஓராண்டில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டிருந்தது. பத்தொன்பதாவது திருத்தத்தைத் தொடர்ந்து, அது நான்கரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. அதாவது, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முழுமையாக நிறைவடைய வெறுமனே 6 மாதங்களுக்கு முன்னர்தான் சபையைக் கலைக்கும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு ஏற்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதேநேரத்தில், பிரதமரின் (அதாவது, நாடாளுமன்றின்) அதிகாரங்களை அதிகரித்திருக்கின்றன.

மேலதிகமாக, ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவி ஆயுட்காலங்கள், தலா 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருந்தன. அவை, இரண்டுக்கும் பொதுவானவையாக இருந்தன. அதேபோல், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர், ஜனாதிபதிப் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கோ போட்டியிட முடியாது என்ற ஏற்பாடும் கொண்டுவரப்பட்டது.

இந்தத் திருத்தம் முழுமையானதாகத் தெரியாததற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட பல மாற்றங்களை, இலங்கையின் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. சர்வஜன வாக்கெடுப்பின்றி அவற்றை நிறைவேற்ற முடியாதென்று அந்நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதனால், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் நீக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருந்தது. இதனால்தான், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க முனையும்போது (மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஆட்சியின் இரண்டாவது பாதியில் நடந்துகொண்டதைப் போல்), நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை, இத்திருத்தம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இத்திருத்தத்தின் பின்னர் கொண்டுவரப்படுவதற்காக வரையப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பில், இக்குறைபாடுகளில் அநேகமானவை நிவர்த்திசெய்யப்பட்டிருந்தன. ஆனால், அதை நிறைவேற்றும் வாய்ப்புத்தான் கிடைத்திருக்கவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, 19ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் நேரடியான நன்மைகளை வழங்கியிருக்கவில்லை. குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக, அரசியலமைப்புச் சபை காணப்பட்டது.

சபாநாயகரால் தலைமை தாங்கப்படும் அச்சபையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இதனால், தேசிய மட்ட அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதைத்தாண்டி, நேரடியான பயன்களைத் தமிழ் மக்கள் பெற்றிருக்கவில்லை.

இங்கே நேரடியான என்ற சொல் முக்கியமானது. ஏனெனில், சுயாதீனமான ஆணைக்குழுக்கள் மீளவும் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, பொலிஸ் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, எல்லை மீள் நிர்ணயக் குழு போன்றன, ஓரளவு ஜனநாயகத் தன்மையை நாட்டுக்குள் கொண்டுவந்திருந்தன.

நாட்டில் காணப்படும் கட்டமைப்புரீதியான பிரச்சினைகள், ஐந்து ஆண்டுகளில் முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை, அவ்வாறு தீர்க்கப்படவும் இல்லை. ஆனால், தமிழ் மக்கள் மேலும் நெருக்கப்படுவதைக் குறைப்பதற்கு இந்தச் சுயாதீன ஆணைக்குழுக்கள் உதவியிருந்தன என்பது உண்மையானது.

மறுபக்கமாகப் பார்த்தால், 19ஆவது திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அத்திருத்தம் நீக்கப்படுமாயின், தமிழ் மக்களுக்கான பாதிப்புக்கள் அதிகரிக்கும் சூழல் இருக்கிறதென்பதுவும் உண்மையானது. ஏனென்றால், முன்னர் எப்போதும் இல்லாததைப்போல், தெற்கில் கடும்போக்குத் தேசியவாதம் எழுச்சி பெற்றிருக்கிறது. இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அதிகாரங்கள் மீண்டும் ஜனாதிபதியின் பக்கம் குவிக்கப்படுமாயின், தமிழ் மக்களின் (அத்தோடு, ஏனைய சிறுபான்மையின மக்களின்) பிரதிநிதிகளின் குரல்களுக்குப் பெறுமதியற்றுப் போகக்கூடிய சூழல் இருக்கிறது.

நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கும்போது, சிறுபான்மையினப் பிரதிநிதிகளால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பது உண்மை என்ற போதிலும்கூட, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் எதிர்ப்பும் அழுத்தமும், அரசாங்கத்தைச் சிறியளவுக்காவது சிந்திக்க வைக்குமென எதிர்பார்க்கலாம். அப்படியில்லாமல், ஜனாதிபதியின் பக்கம் அதிகாரங்கள் மீண்டும் குவியுமானால், அது ஆரோக்கியமானதாக அமையாது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, 19ஆவது திருத்தத்தில் எந்தெந்த ஏற்பாடுகள் நீக்கப்படுமென்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதை முழுமையாக நீக்கும் வாய்ப்பு இல்லையென்றே கருதப்படுகிறது. ஏனெனில், என்னதான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்பட்டாலும், ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலேயே சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு செயற்படுவதற்கு ஜனாதிபதியோ, அரசாங்கமோ விரும்பாது. இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ பெற்ற தோல்விக்கு, பிராந்திய வல்லரசான இந்தியாவின் நம்பிக்கையை அவர் இழந்தமை முக்கிய பங்கு வகித்தது என்ற கருத்துக் காணப்படுகிறது. ஆகவே, அப்படியான ஒன்றை மீளவும் செய்வதற்கு அவரின் கட்சி விரும்பாது.

மறுபக்கமாக, 18ஆவது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டமை, அத்தோடு 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமை ஆகியவை, ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவையே அன்றி, நாட்டின் கொள்கைக்காக மேற்கொள்ளப்பட்டவை அன்று என்ற பார்வை, ராஜபக்‌ஷக்களிடம் காணப்படுகிறது. திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள், அவ்வாறுதான் ராஜபக்‌ஷக்களால் கருதப்படுகிறது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டமை (பசில், கோட்டாபய ராஜபக்‌ஷ இருவரும் அப்போது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தனர்), ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள்தான் பதவி வகிக்க முடியும் என்ற ஏற்பாடு (மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரானது என்று கருதப்பட்டது), ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35 வயதாக உயர்த்தியமை (திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெறவிருந்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த நிலையில், இம்மாற்றம் காரணமாக நாமல் ராஜபக்‌ஷவால் போட்டியிட முடிந்திருக்கவில்லை. அவருக்கு இப்போது வயது 34) போன்றன, தம்மைப் பழிவாங்கும் மாற்றங்கள் என ராஜபக்‌ஷக்கள் கருதுகின்றனர். ஆகவே, இவற்றை நேரடியாக மாற்றாவிட்டாலும்கூட, 19ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை, தங்களுக்கான தனிப்பட்ட சவாலாகவும் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதையும் தாண்டி, இன்னொரு சுவாரசியமான விடயமும் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் போட்டியிடுவார் என்பது ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்த ஒன்று. ஆனால், அப்போது எதிர்பார்க்கப்பட்டதெல்லாம், புதிய ஜனாதிபதியாக வருபவர், ஒரு கைப்பொம்மையாக இருப்பார், மஹிந்த ராஜபக்‌ஷதான் முழுமையான அதிகாரம் கொண்டவராக இருப்பார், அதன் பின்னர், அரசியலமைப்பை மாற்றி, பிரதமர் பதவியைப் பலப்படுத்துவார்கள் என்றுதான் கருதப்பட்டது.

ஆனால், பதவிக்கு வந்ததிலிருந்து, தனித்த ஆளுமையாகத் தன்னை வெளிப்படுத்துவதில், கோட்டாபய வெற்றிபெற்றிருக்கிறார். சில நேரங்களில், அண்ணாவையும் தாண்டி முடிவுகளை எடுக்கின்ற ஒருவராகவும் அவர் இருக்கிறார். அண்ணாவின் அமைச்சின் கீழ்க் காணப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களுக்குக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக உடனடியான முன்மொழிவுகளைத் தர வேண்டுமென அவர் எச்சரித்திருந்தார்.

ஆகவே, இப்போது கிடைத்திருக்கின்ற இந்த மூன்றிலிரண்டு ஆணைக்குப் பின்னர், பிரதமரின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படுமா என்பது சந்தேகத்துக்குரியதுதான். மாறாக, ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படும் வாய்ப்புத்தான் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நிகழும்போது, குடும்பத்துக்குள் அது எவ்வாறான அலைகளை ஏற்படுத்துமென்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

ஆகவே, பத்தொன்பதாவது திருத்தத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு, இருபதாவது திருத்தத்தைக் கொண்டுவருகிறதோ இல்லையோ, ஏழரைச் சனியைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதுதான், அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– கோபிகிருஷ்ணா கனகலிங்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!