மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வடக்கு, கிழக்கிலும் போட்டியிடும்

“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள குறுகிய செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.

அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி சம்பந்தமான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.

நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக்கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொலைபேசி சின்னம் வராது” – என்றார்.

‘வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா?’ என மனோ கணேசனிடம் வினவியபோது, “தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான். அதுபோல் பலநேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோசித்து பயணிப்போம்” – என்று பதிலளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!