கருணா ஆஜராகவில்லை; அம்பாறைக்கு தேடிச் சென்றது சி.ஐ.டி.

“தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவில்லை. ஆனையிறவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் தாம் கொலைசெய்ததாக அவர் தேர்தல் பிரசாரமொன்றின்போது கூறியது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணையை அவருக்கு அனுப்பியிருந்த போதிலும், அவர் ஆஜராகததால் அது குறித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் சிலர் அம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.”

– பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கருணா அம்மானிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கமைய திங்கட்கிழமை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  
அவர் சமுகமளிக்காததால் செவ்வாய்கிழமையும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சமுகமளித்திருக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை வழங்கியுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறுவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிலர் அம்பாறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கொலை தொடர்பில் கருணா தெரிவித்திருக்கும் பிரசாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அவரைக் கைதுசெய்ய முடியாது. அவரிடம் பெற்றுக்கொள்ளும் வாக்குமூலங்களில் ஏதாவது தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே கைது செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” – என்றார்.

இந்தநிலையில், கருணா அம்மான் தன்னால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுகவீனம் காரணமாக ஆஜராக முடியவில்லை என்று தனது சட்டத்தரணி ஊடாக சி.ஐ.டிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!