தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருக்கிறார் – முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்
தாவூத் இப்ராகிம் தனது மண்ணில் இருப்பதை பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். இதுநாள் வரை தாவூத் இப்ராகிமுக்கு தாங்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் 88 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தாவூத் இப்ராகிம் தனது மண்ணில் இருப்பதை பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
1993-ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம். தாவூத் இப்ராகிமின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்சு தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை தடுத்து நிறுத்தாவிடில் கறுப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி உள்பட பல்வேறு சர்வதேச நிதி அமைப்புகளில் இருந்து நிதி கிடைப்பது கடும் சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால், 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த காலக்கெடுவை எப்ஏடிஎப் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், நிதி கெடுபிடிகளை தவிர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான், 88 இயக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் ,முகம்மது இயக்கத்தின் மசூத் அசார் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.