இரண்டு வருடங்களில் கொரோனாவை அழித்து விடலாம்
“அடுத்த இரண்டு ஆண்டுக்குள், ‘கொரோனா’ வைரஸை முற்றிலுமாக அழித்து விடலாம்” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் தென்பட்ட, கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் பரவியுள்ளது. இதுவரை, 2.3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், எட்டு லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியதாவது:
“கடந்த, 1918ல் உலகெங்கும் பரவிய, ‘ஸ்பானிஷ் ப்ளூ’ காய்ச்சலால், 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.அதில், ஐந்து கோடி பேர் உயிரிழந்தனர்.
உலகமயமாக்கல், மிகவும் விரைவான தொடர்பு, நெருக்கம் ஆகியவை காரணமாக, தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு சாதகமாக இருக்கிறது. இந்த வைரசை எதிர்கொள்ள தற்போது நிறைய வசதிகளும் உள்ளன. அத்துடன், தடுப்பூசியும் வந்து விட்டால், மிக வேகமாக வைரஸ் பரவலை தடுத்து விடலாம். ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலைவிட, கொரோனா வைரஸ் பரவலை மிக வேகமாக முற்றிலுமாக தடுத்துவிடலாம். அடுத்த இரண்டு ஆண்டுக்குள், கொரோனா வைரசை முற்றிலுமாக அழித்து விட முடியும் – என அவர் கூறினார்.