1200 ஆண்டு பழமைவாய்ந்த புத்தர் சிலை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 1,200 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் சிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தெற்கு சீனாவின் லேசான் என்னுமிடத்தில் இமே மலைப்பகுதியில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 233 அடியாக உள்ளது. இந்த சிலை யாங்ஸ்டே நதிக் கரையில் அமைந்துள்ளது.
தற்போது சிச்சுவான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாங்ஸ்டே நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளம் புத்தர் சிலையின் பாதங்களை தொட்டபடி சென்று கொண்டுள்ளது. வெள்ளப்பபெருக்கு அதிகமானால் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சிலை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 வருடங்களாக புத்தர் சிலையில் பாதங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.