பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இதுவரையில் இந்த நாட்டில் சுமார் 5 ஆயிரம் சுற்றுலா ஹோட்டல்களும், விடுதிகளும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பதிவு செய்யப்படாத 20 ஆயிரம் இடங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான சுற்றுலா ஹோட்டல்கள், விடுதிகளை விரைவாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.