ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வலைவீசும் மக்கள் சக்தி
அரசாங்கத்தின் நடவடிக்கையினால் பெரும் அதிருப்தியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை நியமனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூத்தவர்களை பின்தள்ளிவிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரபட்சம் காட்டியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்
இதனிடையே, 19வது திருத்தத்தை ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க கூடாது எனவும், அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு அதிகாரத்தை பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்