பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள பிள்ளையானுக்கு அனுமதி
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/pillaiyan-1.jpg)
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாளைமறுதினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் 3ஆவது சந்தேகநபராக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கபட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி பிள்ளையானின் சட்டத்தரணிகளால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த நகர்வு மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதிபதி டி. சூசைதாசன், சிவநேசத்துரை சந்திரகாந்தனை நாளைமறுதினம் பாராளுமன்ற அமர்வில் பூரணமாகக் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கினார்.
பிள்ளையானை, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற அமர்வுக்காக அழைத்துச் செல்லவுள்ளனர்.
பிள்ளையானின் சார்பில் சட்டத்தரணிகளான யு.ஏ.நஜீம், ஏ.உவைஸ், திருமதி மங்கேஸ்வரி சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.