மஹிந்த, தினேஷ் இருவருடனும் அமெரிக்கத் தூதர் முக்கிய பேச்சு
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக அமெரிக்கத் தூதுவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்குத் தான் வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்தார் எனவும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்குத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆதரவை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கையின் வலுவான இறையான்மை குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பிலும் இரு தரப்பிடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன மீண்டும் நியமிக்கப்படுள்ளமை குறித்து அமெரிக்க தூதுவர் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.