ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தைக் கொன்றோம்: பொறிக்குள் மாட்டினார் கருணா
கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடரிபில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று காலை பணிப்புரை விடுத்திருந்தார். இதையடுத்துக் கருணாவை விசாரணைக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்துள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன், ‘ஆனையிறவு சண்டையில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொன்றோம்’ என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த அறிவிப்பு தெற்கு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது தம்மால் இழைக்கப்பட்டதாகக் கருணாவால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பதில் பொலிஸ்மா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.