இணக்க அரசியல் காலத்தின் கடமை – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

“தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் இணக்க அரசியலில் பிரவேசிப்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

இன்றைய அரசு எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

“முன்னொரு காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி இணைந்து செயற்படுவது என்பது கேள்விக்குறியான விடயமாக இருந்தது. தமிழ் மக்கள் பலரும் அதனை விரும்பாதவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், இன்றைய நிலைமை வேறாக உள்ளது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகின்றார். அடுத்து வரும் நாடாளுமன்றம் நிச்சயமாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒரு அமைச்சரவையைக் கொண்ட நாடாளுமன்றமாக அமையப்போகின்றது.

எனவே, தமிழ் மக்களின் சார்பாக இருக்கும் கட்சிகள் இவர்களுடன் எதிர்ப்பு அரசியலை நடத்தி எவ்விதமான பிரயோசனமும் இல்லை.

ஆகவே, விரைந்து சென்று தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து அரசமைப்பில் தமிழ் மக்களுக்குச் சார்பான மாற்றங்களை – திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். அதுவே உண்மையான நிலைப்பாடாகும்.

அந்த அடிப்படையில் இன்றைய அரசு நாளைய நாடாளுமன்றத்தை அமைக்கின்றபோது அதில் அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணையாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு எமது ஆதரவைத் தெரிவிப்பதன் ஊடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆதரவைத் தருவார்கள்.

எனவே, இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!