ஜமேக்கா அணியின் உதவி பயிற்சியாளர் சர்வான் விலகல்
கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 18-ஆம் திகதி மேற்கு இந்தியாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளில் ஒன்றான ஜமேக்கா தல்லாவாஸ் அணியின் உதவி பயிற்சியாளராக மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சொந்த காரணங்களுக்காக சி.பி.எல். போட்டியின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். இனி அவர் அணியுடன் இணைய வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக வினோத் மகராஜ், ரையான் ஆஸ்டின் ஆகிய இருவர் உதவி பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
‘சர்வானின் அனுபவமும், கிரிக்கெட் அறிவும் எங்கள் அணி வீரர்களுக்கு உதவிகரமாக இருந்தது. அவரது விலகல் ஜமைக்கா அணிக்கு மிகப்பெரிய இழப்பு’ என்று அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி ஜெப் மில்லர் குறிப்பிட்டார்.
தன்னை ஜமேக்கா அணியில் இருந்து வெளியேற்றியதற்கு சர்வானே காரணம் என்றும், அவர் கொரோனாவை விட மோசமானவர், நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்பு கிறிஸ் கெய்ல் குற்றம் சாட்டியது நினைவு கூரத்தக்கது.