தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் – ஆறு. திருமுருகன்

“பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பண்பினால் ஒன்றுபட்டு எந்த மக்கள் வாக்களித்தார்களே அந்த மக்களுக்கு ஒன்றுமையாகச் சேவை செய்வதற்கு ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.”

– இவ்வாறு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுகூட்டி ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்யவுள்ளதாகவும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக மக்களுக்கு உதவுகின்ற நற்பணிக்காக ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்று மிகவும் அன்பாகப் பொதுமக்கள் சார்பில் வேண்டுகின்றேன்.

குறிப்பாக பழைய பகைமைகளை வளர்த்துக்கொள்வதால் பயனில்லை. இன்று மக்கள் நன்மை கருதி எதிர்கால நல்விருத்தி கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை இன்று எமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, பகையை வளர்த்துக்கொள்ளாமல் பண்பினால் ஒன்றுபட்டு எந்த மக்கள் எமக்கு வாக்களித்தார்களே அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

இதற்காக விரைவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றுகூட்டி ஒற்றுமையாகச் செயற்படுவதற்கான கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளோம்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!