சஜித்தை பலவீனமான தலைவராக காட்ட முயலும் அரசுக்குத் துணை முடியாது – மனோ

 
“தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தைப் பெறுவது மட்டும்தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதைப் பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்துச் செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாஸவை,  சிங்கள மக்கள் மத்தியில் இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக பலவீனமானவராகக் காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணைபோக முடியாது.”

– இவ்வாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

“சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை சுவரில் சாய்த்து பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரச ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படிச்  சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரச கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே, சஜித் பிரேமதாஸவையும் இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும் பலவீனமான தலைவராகவும் சித்தரித்து ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசு மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையினாலேயே, தமிழ் முற்போக்குக் கூட்டணி தேசியப் பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வுத் தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்கக் கூடாது என நாம் முடிவு செய்தோம்.

ஆகவே, இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்குக் கொண்ட எமது  நிலைப்பாட்டை எமது வாக்காளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தக சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள்  உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன்” – என குறிப்பிடப்பட்டுளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!