ஒரே நாளில் 195 கோடி ரூபாய் வசூலித்த கமலா ஹரிஸ்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த 24 மணி நேரத்துக்குள், ஜனநாயகக் கட்சிக்கு 195 கோடி ரூபாய் [இந்திய ரூபா]நன்கொடை வசூலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில்ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணைஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலாஹரிஸை ஜோ பிடன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் டெலாவரில் நடந்த பிரசார கூடத்தில் ஜோ பிடனுடன் கமலா ஹாரிசும் பங்கேற்றனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியினரும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. தன் முதல் பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹரிஸ், கடந்த மூன்றரை ஆண்டுகளில் ட்ரம்ப் அரசின் பல்வேறு தோல்விகள் குறித்து பட்டியலிட்டார். இந்தக் கூட்டத்தில் தன் குடும்பம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

“நான் அரசியலுக்கு வருவதற்கு காரணமே என்னுடைய குடும்பத்தார் சிறு வயதில் கற்றுக் கொடுத்தது தான். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி நாம் போராடுகிறோம்; ஒன்றை எதிர்த்து அல்ல. நாம் நாட்டிற்கு எது சிறந்தது என்பதற்காக போராடுகிறோம்,” என கமலா ஹரிஸ் குறிப்பிட்டார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதிவேட்பாளராக கமலா ஹரிஸ் பெயர் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஜனநாயகக் கட்சிக்கு 195 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. இது ஒரு நாளில் கிடைத்த நன்கொடைகளில் புதிய சாதனையாகும். இதன் மூலம் குடியரசு கட்சிக்கு கிடைத்துள்ள மொத்த நன்கொடையான 2,244 கோடி ரூபாயை ஜனநாயகக் கட்சி நெருங்கியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் ஏ.டி.எம். என்றழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கமலா. அங்கு அவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. அதனால், அடுத்து வரும் நாட்களில் கட்சிக்கான தேர்தல் நன்கொடை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!